Connect with us

“15 years of Vaaranam Aayiram: ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மனதில் அடியாழ உணர்வுகளைக் கிளறும் திரைப்படம்!”

Cinema News

“15 years of Vaaranam Aayiram: ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மனதில் அடியாழ உணர்வுகளைக் கிளறும் திரைப்படம்!”

தமிழ் சினிமாவில் சில படங்கள் மாஸ்டர் பீஸான படங்களாக அமையும். அந்த மாஸ்டர் பீஸான படத்தை எடுத்த படக்குழுவினர் மீண்டும் இணைந்து படம் கொடுத்தால்கூட, அந்தப் படத்தின் பிரதிபலிப்பையோ வெற்றியையோ திருப்பித் தரமுடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு படைப்பு தான், வாரணம் ஆயிரம். இந்தப் படத்தின் பெரிய பிளஸ் என்னவென்றால், இது வாழ்வியல் சார்ந்த படம். ஏதாவது பிரச்னை இருக்கும்போது இந்தப் படத்தைப் பார்த்தால், அந்தப் பிரச்னைக்குண்டான தீர்வை படத்தில் இருந்து நாம் பெற முடியும்.

ஏனெனில் வசனங்களாகவும் சரி, காட்சிகளாகவும் சரி, இப்படத்தில் பல்வேறு லேயர்கள் மறைந்து இருந்து நாம் ஒவ்வொரு முறை இந்த படத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு வித உணர்வைத் தருகின்றன. அது மகிழ்ச்சியான தருணமாக இருந்து படத்தினைப் பார்த்தாலும், அந்த நுண்ணுணர்வினை நம்மிடம் கடத்தத் தவறுவதில்லை. அப்படி ஒரு நுண்ணுணர்வுமிக்க படம், வாரணம் ஆயிரம். அதில் தான் இப்படம் வென்றிருக்கிறது. வாரணம் ஆயிரம் படத்தின் கதை என்ன?

போர்முனையில் இருக்கும் மேஜர் சூர்யாவுக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டார் எனும் செய்தி கிடைக்கிறது. அந்த எமோஷனலான சூழலில், தன் சிறு வயதில் இருந்து தந்தையுடனான உறவை நினைத்துப் பார்க்கிறார், மகன் சூர்யா. அவற்றை ஒவ்வொன்றாக விவரிக்கிறது, வாரணம் ஆயிரம். படத்தில் தந்தை கிருஷ்ணனாகவும், மகன் சூர்யாவாகவும் நடிகர் சூர்யா நடித்திருப்பார். தாய் மாலினியாக நடிகை சிம்ரனும், காதலி மேக்னாவாக நடிகை சமீரா ரெட்டியும், மனைவி பிரியாவாக திவ்யா ஸ்பந்தனாவும் செய்திருப்பர்.

வாரணம் ஆயிரம் படத்தில் டைட்டில் கார்டில் பின்னணியில் 80களில் ஹிட்டான பாடல்கள் ஒலிக்கும். அந்த கலர் டோனும் கவுதம் மேனனின் வாய்ஸில் பாடல்களும் ஆரம்பத்திலேயே கவிதை உணர்வை ரசிகனின் மனதில் கடத்தும். படத்தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் முன் தினம் பார்த்தேனே பாடல், தந்தை கிருஷ்ணனுக்கும் – தாய் மாலினிக்கும் இடையிலான 70களின் காலகட்ட காதலை கண்முன் காட்டியிருக்கும். குறிப்பாக, அன்றைய காலகட்டத்தில் இருந்த லவ் புரோபோஷல் காட்சி பலரையும் ஈர்த்திருக்கும்.

பின் தந்தை கிருஷ்ணன், பிறந்த மகன் சூர்யாவை கையில் வைத்துக்கொண்டு பேசும் காட்சி ஆண்கள் பலரது வாழ்விலும் நடந்த ஒன்றாகத்தான் இருக்கும். அதில் வரும் வசனம், ’கையில் பத்து காசு இல்ல. ஆனா நான் தான் உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான மனுஷன். இவனைசுத்தி எல்லாமே அழகா இருக்கணும். வாழ்க்கையில் இவனுக்கு என்ன எழுதியிருக்குன்னு தெரியல. ஏதாவது தப்பா எழுதியிருந்தா நான் அதை திருத்தி எழுதுவேன்னு’ என தந்தை கிருஷ்ணன் சொல்கிற அந்த வசனம் பலருக்கும் நம்பிக்கை தந்தது. நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையை வாரணம் ஆயிரத்துக்கு முன், வாரணம் ஆயிரத்துக்குப் பின் இரு வகையாகப் பிரிக்கலாம். வாரணம் ஆயிரம் 2008, நவம்பர் 14ல் ரிலீஸானபோது, அவரின் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் படத்திற்கு அவர் போட்ட எஃபெர்ட் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தையே பெற்றுத்தந்தது. அதிலும் ஒரு சேஞ்ச் ஓவர் காலகட்டத்தில், ’நான் என் ஜூனியர்ஸ்க்குச் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்னே ஒன்னு தான்.. உடம்ப ரெடி பண்ணுங்க’ எனப் பேசி சூர்யா வொர்க் அவுட் செய்யும் காட்சிகள் நம்பிக்கையூட்டுபவை.

See also  அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வென்ற Purple Cap - மாறி மாறி அன்பை பரிமாறிக்கொண்ட நட்டு மற்றும் அவரது மகள்

வாரணம் ஆயிரம் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ரகம். அதில் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு கதை இருக்கும். அடியே கொள்ளுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, ஏத்தி ஏத்தி ஏத்தி என் நெஞ்சில் தீயை ஏத்தி, முன் தினம் பார்த்தேனே, ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி, அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல, அனல் மேலே பனித்துளி ஆகிய அனைத்துப் பாடல்களும் அதிரி புதிரி ஹிட்டானவை. எஃப்.எம். எங்கும் ஒலித்தவை எனலாம். ஏத்தி ஏத்தி பாடலைத் தவிர, மீதமுள்ள அத்தனை பாடல்களும் கவிஞர் தாமரையால் எழுதப்பட்டது. ஏத்தி ஏத்தி பாடலை, 90’ஸ் கிட்ஸ்களின் காதல் கவிஞர் நா. முத்துக்குமார் எழுதியிருப்பார்.

படத்தில் தந்தை கிருஷ்ணன் – மகன் சூர்யா இடையே இளமைக் காலத்தில் தொடரும் உரையாடல்கள் மிக அழகாக இருக்கும். உதாரணத்திற்கு, தெருவில் பெண் தோழி ஒருவருடன் மகன் சூர்யா பேசிக்கொண்டிருக்கையில், அதைப் பார்த்த தந்தை கிருஷ்ணன், ‘உன் வீடு சின்னதா இருந்தாலும் அழகா இருக்கு. அவர்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து பேசு’ எனும் காட்சி, அடிவாங்கி ஆக்ரோஷத்தில் இருக்கும் சூர்யாவிடம் ‘இதுக்குத்தான் உடம்ப ரெடி பண்ணி வைச்சிருக்கா. எனி வே குட்நைட்’ எனச்சொல்லி செல்லும் காட்சியிலும், கல்லூரி ஹாஸ்டலில் மகனை விடச் செல்லும் காட்சியில் தந்தை கிருஷ்ணன், ‘ஹாஸ்டல் லைஃப் நிறைய வித்தியாசமா இருக்கும். ரொம்ப மாறிடாத.. தினமும் லெட்டர் எழுது. பத்து வருஷம் கழிச்சு படிச்சுப் பார்க்க நல்லா இருக்கும்’ என மகன் சூர்யாவுக்குச் சொல்லும் காட்சிகள் அனைத்தும் இப்படி ஒரு தந்தை நமக்குக் கிடைத்திட மாட்டாரா என ஏங்க வைப்பவை.

ரயிலில் செல்கையில் மேக்னாவை முதல் தடவை பார்த்ததும் Love at First Sight முறையில் காதலில் விழும் சூர்யா அதை அவர்முன் கிடார் இசைத்து புரோபோஸ் செய்யும் விதம், மேக்னா இருக்கும் வீட்டிற்கே சிலநாட்களில் சென்று மீண்டும் புரோபோஸ் செய்யும் காட்சி ஆகியவை உண்மைக்குத் தூரமாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருந்தன. குறிப்பாக, மேக்னா அமெரிக்கா செல்ல இருப்பதை அறிந்து சூர்யா பேசும், ’நல்லா படிக்கிறவங்க எல்லாம் வெளிநாடுபோகாம இங்கு படிச்சு, இங்கு வொர்க் பண்ணி இங்க டெக்ஸ் கட்டினா, நாடும் நல்லாயிருக்கும். நானும் நல்லாயிருப்பேன்ல’ எனச் சொல்லும் காட்சி மைல்டாக சிரிப்பை மூட்டிவிடும். இதுதான் கவுதம் மேனனின் டச். சீரியஸான காதல் காட்சியில் ஒரு கலகலப்பு இருக்கும்.

அதன்பின் அமெரிக்கா செல்ல தாய் – தந்தையிடம் அனுமதி பெறும் சூர்யா விசா ஆஃபிஸில் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சி கலகலப்பானவை என்றால், சான்பிரான்ஸிஸ்கோவில் பாலத்தின் முன் புரோபோஸ் செய்யும் காட்சி, அதை சிலநாட்கள் கழித்து மேக்னா மீண்டும் அதே இடத்தில் தன் காதலை ஒத்துக்கொள்ள வைக்கும் காட்சிகள் ஆகியவை வாரணம் ஆயிரம் படத்தில் மிக அழகியலானவை.
திடீரென குண்டுவெடிப்பில் உயிரிழக்கும் மேக்னாவின் பிரிவுத் துயரைத் தாங்காமல் ஏர்போர்டில் அழுதுகொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில் அச்சு பிசகாமல் உண்மை இருக்கும். அந்த அழுகையில் சளிகூட வரும். பெரும்பாலும் கத்திபேசும் சூர்யாவின் படங்களைவிட அழுகையின்போது இயலாமையின் வலியை நடிகர் சூர்யா எளிதில் கடத்துகிறார்.

See also  நாங்குநேரி சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை - உயர்கல்விக்கு உதவுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

நடிகர் சூர்யாவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதைத்தான். அதை வெகுநாட்கள் கழித்து, சூரரைப்போற்றுவில் மட்டும் சூர்யா செய்திருப்பார். காதலி மேக்னாவின் இறப்புக்குப் பின் வலி தாங்க முடியாமல் போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் மகன் சூர்யாவை, அவன் திருந்தி திரும்பி வருவான் என ஒரு பயணத்துக்கு வழியனுப்பும் தாய் – தந்தை, தாய் – தந்தை நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக சிகரெட்டை விடும் மகன் சூர்யா, அமெரிக்காவில் ஏர்போர்டில் தான் காதலியின் இறப்பில் தவித்தபோது கண்ணீர் துடைத்த சங்கர் மேனனின் மகனை அவருக்கு மீட்டுத்தருபவை ஆகிய காட்சிகள் இப்போது பார்த்தாலும் Life has to move on என்னும் பாடத்தை மறைமுகமாக போதிப்பவை.

நாம் தேடிய பெண்ணை விட, நம்மைத்தேடும் பெண்களின் காதலுக்கும் நாம் மதிப்பளிக்கலாம் என வாரணம் ஆயிரம் படம் மறைமுக சுட்டிக்காட்டும். சூர்யா கூட, தன்னை சிறுவயதில் இருந்து ஒன் சைடாக காதலித்த தங்கையின் தோழி பிரியாவின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியிருப்பார். சூர்யாவின் பழைய காதல் தந்த ரணத்தை பிரியாவின் காதல் மருந்து போட்டு ஆற்றியிருக்கும். இதுதான் யதார்த்தம்.
வாழ்வு என்பது ஏற்ற – இறக்கங்கள் கொண்டிருப்பவை. அதைச் சரியாக, அழகாக மாற்ற நம்முடைய செயல்பாடுகள் தான் காரணமாக இருக்கும். அதைச் செய்யவேண்டும் என்பதைப் படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் வாரணம் ஆயிரம் சரியாக கிளறுகிறது. இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் பலரால் ஏதோ ஒரு காட்சியில் கனெக்ட் செய்துகொள்ள முடியும். அதுதான் இப்படத்தின் ஹிட்டுக்குக் காரணம் எனலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top