Connect with us

“மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு இறுதிச் சடங்கு! தேமுதிக அலுவலகத்துக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை!”

Cinema News

“மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு இறுதிச் சடங்கு! தேமுதிக அலுவலகத்துக்குள் பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை!”

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இரவு வரை அங்கே பல்வேறு பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திச் சென்றனர். தென்மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும்கூட ரசிகர்கள் வந்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த சிலர் விஜயகாந்த் தமிழக முதல்வராக வந்திருக்கலாம். மக்கள் அந்த வாய்ப்பை இழந்துவிட்டனர் என்று கூறினர்.

முன்னதாக, நேற்று விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக இன்று விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை வசதி என பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.

சென்னை தீவுத் திடலில் விஜயகாந்த் உடலுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர். தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் தேவா அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் பாக்யராஜ் அவரது மகன் சாந்தனு, சீமான், சுந்தர்.சி, குஷ்பு, நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர் , நடிகர் ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இன்று பிற்பகல் 1 மணியளவில் தீவுத் திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் விஜயகாந்த் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தீவுத்திடலில் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருப்பதால், இறுதி ஊர்வலம் புறப்படுவது தாமதமானது.

இந்நிலையில், இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ள கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குள் குடும்ப உறுப்பினர்கள் தவிர, பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காவல் துறை அறிவித்துள்ளது. ஆனால், விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள கோயம்பேடு அலுவலகத்துக்கு முன்பாக ஏராளமானவர்கள் குவிந்துள்ளனர். இதனால், கோயம்பேடு – வடபழனி – கிண்டி செல்லும் பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இறுதிச் சடங்கு நடைபெறும் அலுவலகத்துக்குள் தங்களை அனுமதிக்க வலியுறுத்தி, கோயம்பேட்டில் காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top