Connect with us

இலங்கை அரசின் செயலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு – வைகோ காட்டம்

Featured

இலங்கை அரசின் செயலை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு – வைகோ காட்டம்

இலங்கை அரசின் செயலை மத்திய அரசு நன்றாக வேடிக்கை பார்த்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி-4 ஆம் தேதி இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர், ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய 3 பேரில் இருவருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசைக் கண்டித்து அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் பிப்ரவரி-18 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு விசைப்படகுகளை இயக்க மாட்டோம் எனவும் மீனவர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்த நபர்கள் இராமேசுவரம் துறைமுகத்திற்கு வரவேண்டாம்.

விசைப்படகிற்காக அவர்கள் செலுத்திய பணம் விரைவில் திருப்பித் தரப்படும்” என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா திருப்பயண குழு ஒருங்கிணைப்பாளர் இராமேஸ்வரம் பாதிரியார் சந்தியாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை தமிழக மீனவர்கள் புறக்கணித்து இருப்பதையும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதையும் ஒன்றிய பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழக மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர். 534 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

See also  காங்கிரஸ் நிர்வாகி சந்தேக மரணம் - சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

இருப்பினும் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிப்பதோடு, பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடி படகுகள் உள்ளிட்ட கருவிகளை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என வைகோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top