Connect with us

“Chess: கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்தின் வைஷாலி சாதனை!”

Sports

“Chess: கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று தமிழகத்தின் வைஷாலி சாதனை!”

ஸ்பெயின் நாட்டில் லோப்ரெகட் ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 22 வயதான வைஷாலி 2-வது சுற்றில்துருக்கியை சேர்ந்த ஃபிடே மாஸ்டரான தமேர் தாரிக் செல்ப்ஸை தோற்கடித்தார். இதன் மூலம் வைஷாலி 2,500 எலோ புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

கடந்த அக்டோபர் மாதம் கத்தாரில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தொடரில் வைஷாலி, கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான 3-வது நார்மை பூர்த்தி செய்திருந்தார். தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற கிராண்ட் சுவிஸ் தொடரில் அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி வைஷாலி வெற்றி கண்டார். இதன் மூலம் அவர், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை நெருங்கினார். தற்போது அந்த இலக்கை ஸ்பெயின் போட்டியில் அடைந்துள்ளார்.

இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை வைஷாலி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்தியாவின் கோனேரு ஹம்பி,ஹரிகா துரோணவல்லி ஆகியோர்கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற 84-வது நபர் வைஷாலி ஆவார். அதேவேளையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலில் வைஷாலி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஆர்.வைஷாலி, இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற முதல் சகோதர-சகோதரி என்ற சாதனையையும் படைத்துள்ளார் வைஷாலி. பிரக்ஞானந்தா தனது 12 வயதில், கடந்த 2018-ம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றிருந்தார்.

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் விளையாட ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளனர். உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி சுற்றான இந்த தொடர் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டொராண்டோவில் நடைபெறுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Sports

To Top