Connect with us

மகளை இழந்ததும் பெருமையா? – ரிதன்யா தந்தையின் பேச்சு குறித்து வினோதினி ஆவேசம்..

Featured

மகளை இழந்ததும் பெருமையா? – ரிதன்யா தந்தையின் பேச்சு குறித்து வினோதினி ஆவேசம்..

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிதன்யா என்ற பெண், திருமணமான மூன்று மாதங்களில் வரதட்சனை கொடுமையை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, அவரது கணவரும் குடும்பத்தினரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிதன்யாவின் தற்கொலை குறித்து அவரது தந்தை அண்ணாதுரை கூறியதாவது,
“மாற்று வாழ்க்கை அமைத்துக் கொள்வது எல்லாம் அவரவர் விருப்பம். என் மகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணத்தில் வாழ்ந்தவள். அந்த எண்ணத்தோடு இறந்துவிட்டாள். எனவே என் பெண்ணை இழந்தாலும் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. எல்லா பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்வதற்கு வழி இருக்கிறது. ஆனால், இந்த தவறான முடிவை மட்டும் யாரும் எடுத்துவிடக் கூடாது,” என உருக்கமாக தெரிவித்தார். அந்தப் பேச்சு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை வினோதினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை வினோதினி கூறியதாவது:

“ரிதன்யா வழக்கில் நடந்தது என்னவென்றால், திருமணத்திற்கு 500 சவரன் நகை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் 300 சவரன் நகையே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 200 சவரன் நகை தரப்படவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு, மாமனார், மாமியார் ஆகியோர் மன ரீதியாக அழுத்தம் கொடுத்துள்ளனர். கணவரும், ரிதன்யாவுக்கு விருப்பம் இல்லாத நிலையிலும் உடல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுபற்றி அந்தப் பெண் தனது அம்மாவிடம் கூறியபோது, ‘திருமணமாகி 15 நாள்தான் ஆகிறது. குடும்ப வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கும்’ என அவரை சமாதானப்படுத்தி, மீண்டும் அதே குடும்பத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ரிதன்யா படித்த பெண்ணாக இருந்தாலும், வேலைக்கு சென்று வெளி உலகத்தை அறிந்தவளாக இல்லை. அவளது வாழ்க்கையில் நடந்த இந்த கொடுமைகளுக்கு எதிராக எதையும் புரிந்துகொள்ளும் சூழ்நிலை இல்லாததாலும் தான், இப்படியான முடிவை எடுத்துள்ளார். அவருடைய தந்தை ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற எண்ணத்தோடு வாழ்ந்த என் மகள், அந்த எண்ணத்தோடு இறந்ததால் எனக்கு பெருமை’ என பேசியிருக்கிறார். அதுவே அந்த பெண்ணை தற்கொலைக்குத் தள்ளிய முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.”
“ஒரு பெண் மாடலாக உடை அணிவதும், நள்ளிரவு தனியாக செல்லுவதும் அவள் சுதந்திரமாக இருப்பதைக் குறிக்கவில்லை. அவளுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு சமாளிக்கிறாள், எவ்வாறு தெளிவான முடிவுகளை எடுக்கிறாள் என்பதுதான் உண்மையான சுதந்திரம்,” என வினோதினி தெரிவித்துள்ளார்.

“ரிதன்யாவின் தந்தையின் பேச்சை கேட்டபோது, அவர் அந்தப் பெண்ணுக்கு எந்த சுதந்திரத்தையும் வழங்கவில்லை என்பது தெரிகிறது. தன் கௌரவத்தையும், சாதி பெருமையையும் நிலை நாட்டவே திருமணத்தில் நகை, பணம், கார் என வரதட்சனை கொடுத்துள்ளார். வரதட்சனை வாங்குவதும் தவறு, கொடுத்ததும் தவறே. விருப்பப்பட்டு கொடுத்தாலும் அது வரதட்சனையாகவே அமையும்,” என்றார். “300 சவரன் நகை கொடுத்ததன் விவரம் ரிதன்யா தற்கொலை செய்த பின்னரே வெளி வந்தது. இல்லையெனில், இந்த விஷயம் வெளியில் வந்திருக்காது. கொடுக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கொடுக்க முடியாதவர்கள் என்ன செய்வார்கள்? வரதட்சனை வாங்கியவர்களை மட்டும் கைது செய்வது போதாது. அதை கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்,” என்றார்.

See also  சூர்யாவை டிரோல் செய்வோருக்கு எனது பதில்!" – பீனிக்ஸ் இயக்குநர் அதிரடி கருத்து..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top