Connect with us

சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு 90% கல்விக் கடன் – சு. வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

Featured

சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு 90% கல்விக் கடன் – சு. வெங்கடேசன் எம்.பி. பாராட்டு

சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்காக தனியார் வங்கிகள் முதன் முறையாக 90% கல்விக் கடன் வழங்கியுள்ளதற்கு மதுரை எம்.பி வெங்கடேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது :

2023-2024 கல்வி ஆண்டில் மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக்கடன் ரூ.168 கோடி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகமும், வங்கி நிர்வாகமும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் இணைந்து கூட்டாக விரிவான முயற்சி எடுத்தன.

கடந்த 24.11.2023 அன்று மாவட்டம் முழுமைக்குமான கல்விக்கடனுக்கான சிறப்பு முகாம் மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் கல்விக்கடன் பற்றி தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக கடந்த ஆண்டு தரப்பட்ட ரூ.125 கோடி என்ற இலக்கைத் தாண்டி இந்த ஆண்டு ரூ.168.28 கோடி கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2627. இவர்களில் 2078 பேருக்கு 168.28 கோடி ரூபாய் கல்விக்கடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களில் 79% பேருக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்டுள்ள கல்விக்கடனில் தேசியமயமாக்கப்பட்ட 12 வங்கிகள் 1521 மாணவர்களுக்கு ரூ.150.69 கோடி வழங்கியுள்ளன.

21 தனியார் வங்கிகள் 557 பேருக்கு ரூ.17.59 கோடி வழங்கியுள்ளன. கனரா வங்கி 387 மாணவர்களுக்கு ரூ.44.5 கோடி வழங்கியுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 378 மாணவர்களுக்கு ரூ.32.99 கோடி வழங்கியுள்ளது. கூடுதல் முயற்சி எடுத்து அதிக கல்விக்கடன் வழங்கியுள்ள இந்த இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 74% கடன் வழங்கியுள்ளன. கடந்த முறையை விட இந்த ஆண்டில் தனியார் வங்கிகள் 90% க்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு கடன் வழங்கியுள்ளன.

தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஆக்சிஸ் வங்கியில் கல்விக்கடன் 497 விண்ணப்பங்களில் 494 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12.37 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் கல்விக்கடன் பெற்றுத்தரும் இயக்கத்தில் நான்கு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.

150 கோடியைத் தாண்டி வரலாற்றுச் சாதனை

தமிழ்நாட்டில் கல்விக்கடன் வழங்கப்படும் மாவட்ட சராசரி 35 கோடி, மதுரை 168 கோடி.

மும்பையைப் போல கல்விக்கடன் ஒப்புதல் 80 சதவிகிதம்.

தனியார் வங்கிகள் முதன் முறையாக 90 சதவிகிதத்திற்கு மேல் கல்விக் கடன் வழங்கியுள்ளன. இவைகள் எல்லாம் இந்திய அளவில் மிகச்சிறந்த முன்னுதாரணம் ஆகும்.

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - லக்கோவை 10 ஓவருக்குள் வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி..!!

இதற்காக தொடர்ந்து உழைத்திட்ட வங்கிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது பாராட்டினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக அதிக தொகையை கல்விக்கடனாக வழங்கியுள்ள கனரா வங்கியின் சார்பில் துணைப்பொது மேலாளர் சுஜித் குமார் சாகு அவர்களையும் ஸ்டேட் பேங் ஆப் இந்தியாவின் சார்பில் துணைப்பொது மேலாளர் திருமதி.ஹரிணி, முதன்மை மேலாளர் ராம்பிரசாத் அவர்களையும் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அனில் மற்றும் சந்தான பாண்டியன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள் என வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top