Connect with us

தக் லைஃப் Movie – திரைவிமர்சனம்..

Featured

தக் லைஃப் Movie – திரைவிமர்சனம்..

1987ஆம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படத்திற்குப் பிறகு, 38 ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் மணிரத்னமும் நடிகர் கமல் ஹாசனும் மீண்டும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்நிலையில், இந்த கூட்டணியின் இரண்டாவது முயற்சி இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளை வந்தடைந்துள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படக் கதை சுருக்கம்

படத்தின் கதைக்களம் கமல் ஹாசன் தலைமையிலான கும்பல் மற்றும் போலீசாருக்கு இடையிலான மோதலால் தொடங்குகிறது. இதில் சிம்புவின் தந்தை கொல்லப்படுகிறார். தந்தையை இழந்த சிறுவனாக சிம்பு, அதே மோதலில் தங்கையையும் பிரிந்து விடுகிறார். பின்னர், கமல் ஹாசன் சிம்புவை வளர்த்து தனது வம்சத்தின் வாரிசாக அறிவிக்கிறார். இதற்கிடையே கமலுக்கு எதிராக திடீரென துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்குப் பின்னால் சிம்புவே இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் மனமுடைந்து போகும் சிம்பு, கமலிடம் இருந்த நம்பிக்கையை இழக்கிறார். இந்நிலையில் நாசர், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பகவதி ஆகியோர் சிம்புவை தவறான பாதைக்கு இட்டுச் சென்று, கமலை கொல்லும் பணி செய்கிறார். மலை உச்சியில் கமலைக் கீழே தள்ளி விட, சிம்பு தான் கும்பலின் தலைவராகிறார்.

திரைப்படத்தின் விமர்சனம்

‘நாயகன்’ படத்திற்குப் பிறகு கமல் – மணிரத்னம் கூட்டணி என்பதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வானளவிற்கு சென்றது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. திரைக்கதை மெதுவாக நகர்வது, சுவாரஸ்யமில்லாத காட்சிகள், கதாபாத்திரங்களின் பலவீனம் போன்ற காரணங்களால் படம் இடைவெளியில் சலிப்பை ஏற்படுத்துகிறது. படம் ஆரம்பத்தில் சிலவேளை நன்றாக இருப்பதுபோல தோன்றினாலும், அதற்குப் பிறகு அது தடுமாறத் தொடங்குகிறது. முதல்தவணை குறிப்பாக மிகவும் நீளமாகவும் சோதனைக்குரியதாகவும் இருக்கிறது. திரிஷா நடித்துள்ள கதாபாத்திரம் மிகக் குறைவாகவும், முக்கியத்துவமில்லாமல் காட்சியளிக்கிறது. எமோஷனல் கனெக்ஷன் இல்லாததும் படத்தின் ஒரு முக்கிய குறையாகும். மணிரத்னம் படங்களின் வசனங்கள் இதமாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்படத்தில் அந்த வகையில் சிறப்பாக எதுவும் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்

கமல் ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் தங்களது நடிப்பின் மூலம் படம் தாங்கியுள்ளார்கள். குறிப்பாக சண்டை காட்சிகளில் இருவரும் அசத்தலாக நடித்துள்ளனர். இதற்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு மற்றும் அறிவு பாராட்டப்பட வேண்டியவர்கள். ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிராமியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ஆனால் மற்ற கதாபாத்திரங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள்

ஏ. ஆர். ரஹ்மானின் இசை இப்படத்தில் பெரும் ஏமாற்றமாக உள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ‘முத்த மழை’ பாடல் படத்தில் இடம்பெறாமல் போனது சோகமளிக்கிறது. பின்னணி இசையும் ரசிகர்களை கவரவில்லை. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கும் சராசரியாகவே இருந்தன. தொழில்நுட்ப ரீதியாக இப்படம் இன்னும் சிறப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகிறது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

  • கமல் ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோரின் நடிப்பு
  • அதிரடி சண்டை காட்சிகள்

முக்கிய குறைகள்:

  • சுவாரஸ்யமில்லாத திரைக்கதை
  • தெளிவில்லாத கதாபாத்திர வடிவமைப்பு
  • திரிஷா நடித்த பாத்திரத்தின் முக்கியத்துவமின்மை
  • ஏ. ஆர். ரஹ்மானின் இசை ஏமாற்றம்

மொத்தத்தில், ‘தக் லைஃப்’ என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதாலும், அவற்றை பூர்த்தி செய்ய தவறியதாலும், ரசிகர்களுக்கு ஓரளவு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top