Connect with us

மோடியின் பொய் மூட்டைகள் வியாபாரம் தமிழகத்தில் விலை போகாது – முத்தரசன் விமர்சனம்

Featured

மோடியின் பொய் மூட்டைகள் வியாபாரம் தமிழகத்தில் விலை போகாது – முத்தரசன் விமர்சனம்

மோடியின் பொய் மூட்டைகள் வியாபாரம் தமிழக மக்களிடம் விலை போகாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார் .

இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு திரும்ப திரும்ப வந்து செல்வது வியப்பளிக்கிறது.

அரசு நிகழ்ச்சிக்காக வந்தாலும் பாஜகவின் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, மறந்து போயும் கூட உண்மை பேசக் கூடாது என்று உறுதி காட்டி வருவதை அவரது தேர்தல் பரப்புரை பேச்சுகள் வெளிப்படுத்தி வருகின்றன.

நேற்று சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அவரது பேச்சு பொய் முட்டைகள் மொத்த வியாபார விளம்பரமாக அமைந்துள்ளது.

கடந்த 2023 டிசம்பர் முதல் வாரத்திலும், மூன்றாவது வாரத்திலும் தலைநகர் சென்னை உட்பட பத்து மாவட்டங்கள் கடுமையான இயற்கை பேரிடரை சந்தித்தது.

இங்கு மக்கள் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களும், விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்களுக்கும் பெரும் சேதாரம் ஏற்பட்டது.

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வான்வழி ஆய்வு செய்து திரும்பினார். நிவாரணப் பணிகள் நிறைவடையும் நேரத்தில் மத்திய அரசின் நிதியமைச்சர் தென் மாவட்டங்களில் கள நிலவரத்தை நேரில் கண்டறிந்தார்.

மத்திய அரசின் உயர்மட்ட ஆய்வுக் குழுக்களும் பார்வையிட்டன. அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட ஆய்வுக் குழு மாநில அரசின் இயற்கை பேரிடர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் பாராட்டி, உதவிக் கரம் தருவதாக உறுதி அளித்துச் சென்றன.

மாநில முதலவர், இயற்கை பேரிடர் பாதிப்புகளை விரிவாக சேகரித்து, அதன் விவரங்களை பட்டியலிட்டு, தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவித்து ரூ.37 ஆயிரத்து 917 கோடி நிவாரண உதவி நிதி வழங்குமாறு பிரதமரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

கடிதங்கள் எழுதி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து, கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் மத்திய அரசு வழக்கமாக வழங்கும் பேரிடர் கால உதவி தவிர கூடுதலாக ஒரு ரூபாயும் வழங்காமல் வஞ்சித்து விட்டதை பிரதமர் மோடி மறைத்து, மத்திய அரசின் உதவி இல்லாமல் பேரிடர் நிவாரணப் பணிகளை போர்க்கால வேகத்துடன் மேற்கொண்டதுடன் மக்கள் மறுவாழ்வுக்கு ரொக்கப் பண உதவியும் செய்த தமிழக அரசின் மீது பிரதமர் மோடி அபாண்டமாக பழி சுமத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

See also  10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியாகிறது - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு..!!

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் பாஜக அதிகாரத்தில் அமர்ந்தால், வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, நாட்டின் குடி மக்களுக்கு வங்கியில் தலா ரூ 15 லட்சம் வீதம் வைப்பு நிதியாக செலுத்துவோம் என்று மேடைக்கு மேடை பாஜக தலைவர்கள் முழங்கியதை மக்கள் மறந்து விடவில்லை.

ஆட்சியில் அமர்ந்ததும் கள்ளப் பணத்தையும், சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தையும் தடுக்க புழக்கத்தில் இருந்த ரூ500, 1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவித்து, ரூ.2000 மதிப்பு பணத் தாளை அறிமுகப்படுத்தினர்.

இத்திட்டம் படுதோல்வி அடைந்ததை நாடறியும், பதுக்கல் காரர்கள் கை மேலோங்கியதால் ரு.2000 மதிப்பு பணத்தாளும் கடந்த 2023 செப்டம்பர் 30 முதல் செல்லாக் காசு ஆகிவிட்டது.

விவசாயிகளை அழித்து விட்டு, விவசாய நிலங்களை, பெரும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை மாற்றித் தரும் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் வணிக சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் ஓராண்டு காலம் நீடித்தது.

விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க, சிதைக்க, சிதறடிக்க மோடி, யோகி, ஹரியாணா அரசுகள் கூட்டுச் சதி செய்தன. அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டன. ஆனாலும் விவசாயிகள் உறுதியுடன் போராடி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வைத்தனர்.

போராடிய விவசாயிகளிடம் மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும விவசாயிகள் போராட்டம் பேரெழுச்சியுடன் நடந்து வருகிறது. இது பற்றி வாய் திறக்காத பிரதமர் மோடி, இண்டியா கூட்டணியை நாளொரு பொழுதும், பொழுதொரு வண்ணமும் வலிமைப்படுத்தி வரும் திமுக கழகத் தலைவர் மீதும், அவர் குடும்பத்தினர் மீதும் அவதூறு சேறுவாரி வீசியுள்ளார்.

பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழக மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில், மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என முத்தரசன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top