Connect with us

கமலின் விளக்கம் ஏற்க முடியாது – மன்னிப்பு கூற வேண்டும் என நீதிமன்றம் கண்டனம்!

Featured

கமலின் விளக்கம் ஏற்க முடியாது – மன்னிப்பு கூற வேண்டும் என நீதிமன்றம் கண்டனம்!

இந்திய திரைத்துறையின் முக்கிய நடிகரான கமல் ஹாசன் தற்போது ஒரு சர்ச்சையின் மையமாக இருக்கிறார். தமிழில் இருந்து கன்னடம் உருவானது என அவர் கூறிய கருத்து, கன்னட அமைப்புகள் மற்றும் மக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரது ‘தக் லைஃப்’ திரைப்படம் கன்னடத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ‘தக் லைஃப்’ திரைப்பட வெளியீட்டிற்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, கமல் ஹாசன் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி நாகப்பிரசன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என கமல் ஹாசன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், “கமல் ஹாசன் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனதில் புண்படக்கூடிய வகையில் பேசியிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால்தான் இந்த மனுவை பரிசீலிக்க முடியும். பாதுகாப்பு வழங்க வேண்டுமா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவெடுக்கும். ஆனால் அதற்கு முன், அவர் மன்னிப்பு கேட்டாக வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அதையடுத்து, “வரலாற்று ஆய்வாளர் ஆதாரங்களுடன் கூறியிருந்தால் விவாதத்திற்கு உரியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது கமல் ஹாசன் பேச்சை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காமல் அந்தக் கருத்தை திரும்ப பெற முடியாது” என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும், “உங்கள் பேச்சு காரணமாக நடிகர் சிவராஜ்குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்பதைப்பற்றி யோசிக்கவும். மதியம் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும். நானும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை பார்க்க விரும்பினேன். ஆனால் இந்த பிரச்சனையால் பார்க்க முடியவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது” என்றார் நீதிபதி நாகப்பிரசன்னா.

இந்தச் சூழ்நிலையில், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “‘தக் லைஃப்’ பட விழாவில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. பட விழாவில் கலந்து கொண்ட சிவராஜ்குமாரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே அந்த வார்த்தைகள் பேசப்பட்டன. அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களுக்கு நான் வருந்துகிறேன். நாமெல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்பதற்காகத்தான் அந்த வகையில் பேசியேன். கன்னட மொழியின் பாரம்பரியத்தை குறித்து எனக்கு எந்தவிதமான விமர்சனமோ குறை கூறலோ இல்லை. தமிழை போலவே கன்னட மொழியும் நான் பெருமையாக போற்றும் ஒரு இலக்கிய, கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்துகொண்டதற்காக எப்படி மன்னிப்பு கேட்பது?” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்தக் கடிதம் கமல் ஹாசன் தரப்பில் வெளியான நிலையில், “விளக்கம் நன்றாக இருக்கிறது. ஆனால் ‘மன்னிப்பு’ எனும் சொல் அந்தக் கடிதத்தில் இல்லை” என கர்நாடகா உயர் நீதிமன்றம் குறிப்பிடியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top