Connect with us

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் – ஓபிஎஸ் கடும் கண்டனம்

Featured

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பூர்வக்குடி மக்கள் – ஓபிஎஸ் கடும் கண்டனம்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் வசித்து வந்த பூர்வ குடிமக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ள தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 368-ல், வன வளம் சார்ந்த மற்றும் வனப்பகுதி மக்களின் அன்றாட மற்றும் நெடுங்காலப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கண்டிடும் வகையில் வன ஆணையம் அமைக்கப்படும் என்றும், வன வளங்கள் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வன இயல் கல்லூரிகள் தருமபுரி, தென்காசி, கோபிசெட்டிப்பாளையம் போன்ற இடங்களில் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்தும், இந்த இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதிக்குட்பட்ட ஏமனூர், சிங்காபுரம், மணல்திட்டு, வேப்பமரத்துகொம்பு போன்ற வனப் பகுதிகளில் ஐந்து தலைமுறையாக வாழ்ந்து வரும் 15-க்கும் மேற்பட்ட பூர்வ குடிமக்களை வலுக்கட்டாயமாக காவல் துறையினரின் துணையோடு வெளியேற்றியதாகவும், ஒகேனக்கல் ஊட்டமலை ஒட்டிய பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், இதன் காரணமாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்த அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த வலுக்கட்டாய வெளியேற்றத்தின்போது, காவல் துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து மூன்று பேர் படுகாயமடைந்து பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. தி.மு.க.வின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்து தலைமுறையாக ஓர் இடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முன்பு, அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்கள் விரும்பும் இடங்களில் மாற்று இடம் அளிக்கப்பட வேண்டியதும், நிதி உதவி வழங்கப்பட வேண்டியதும் அவசியம்.

எந்த மாற்று இடத்தையும் அவர்களுக்கு அளிக்காமல், எவ்வித உதவியையும் வழங்காமல் அவர்களை வெளியேற்றுவது மனிதநேயமற்ற செயல். தி.மு.க. அரசின் இந்தச் செயல் அறநெறி மீறி மக்களை கொடுமைப்படுத்துவதற்குச் சமம்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பூர்வகுடி மக்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குவாலிபியர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

More in Featured

To Top