Connect with us

தொடரும் கொலை சம்பவங்கள் – தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா..? – டிடிவி தினகரன் காட்டம்

Featured

தொடரும் கொலை சம்பவங்கள் – தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா..? – டிடிவி தினகரன் காட்டம்

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும்
அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

திருநெல்வேலியில் பட்டப்பகலில் இளைஞர் கொடூரக்கொலை, சிவகங்கையில் இளைஞர் வெட்டிக்கொலை, சென்னை கொடுங்கையூரில் மது விருந்தில் பங்கேற்ற நபர் படுகொலை, தஞ்சாவூரில் முதியவர் ஒருவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டிக் கொலை, ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் மற்றும் திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர் கொலை என நாள்தோறும் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் சர்வ சாதாரணமாகிப் போன கொலை தொடர்பான செய்திகள் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கின்றன.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தமிழகத்தில் கடந்த 4 தினங்களில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதும், எண்ணற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதும் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைத்திருக்கிறது.

தமிழகத்தில் நிகழும் கொலைச் சம்பவங்களுக்கு முன்விரோதம், குடும்பத்தகராறு, கூலிப்படை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவை அனைத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கக் கூடிய கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவே, தங்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா ? அந்த காவல்துறையை வழிநடத்தும் ஒரு ஆட்சி தமிழகத்தில் இருக்கிறதா ? என எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய அதே கேள்விகளை, தற்போது அவரை நோக்கியே ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பத் தொடங்கியிருப்பது, திமுக அரசில் காவல்துறை முழுவதும் செயலிழந்துவிட்டதையே வெளிப்படுத்துகிறது.

எனவே, இனியாவது தமிழக மக்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி, கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வகையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதோடு, குற்றச் சம்பவங்கள் பலவற்றிற்கும் முக்கிய காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அரசியல்வயப்படுங்க பசங்களா?” – தேவர் விழாவில் விஜய்யை விமர்சித்த மோகன் ஜி!

More in Featured

To Top