Connect with us

கோயம்புத்தூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்! — ஷூட்டிங் தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்!

Politics

கோயம்புத்தூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்! — ஷூட்டிங் தளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்!

கோவை: தமிழ்நாட்டின் தொழில்துறை பெருமையை உயர்த்தும் வகையில், கோவை அவிநாசி சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் கோயமுத்தூரில் இருந்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்போது சொந்த ஊரான கோயமுத்தூரில் ‘ஜி.டி. நாயுடு’ படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்துள்ளேன். இந்த படம், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் போலவே, இந்தியாவின் எடிசன் எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைப் பேசுகிறது,” என கூறியுள்ளார். மேலும், “இந்த படத்தில் மாதவன் ஜி.டி. நாயுடுவாகவும், நான் ராமையா பிள்ளையாகவும் நடித்துள்ளேன். கிருஷ்ணா இயக்கி, வர்கீஷ் தயாரிக்கிறார்,” என விளக்கினார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: “இப்போது ஜி.டி. நாயுடுவின் பெயரை ஒரு பெரிய மேம்பாலத்திற்கு வழங்கியுள்ள நமது திராவிட மாடல் அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நான் கோயமுத்தூர்காரனாக பெருமைப்படுகிறேன். இது நம் ஊருக்கே ஒரு பெருமை. எங்கள் படக்குழுவின் சார்பாகவும், ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினரின் சார்பாகவும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்,” என உணர்ச்சியுடன் தெரிவித்தார் சத்யராஜ்.

உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அவிநாசி சாலை மேம்பாலம் தற்போது தென்னிந்தியாவின் நீளமான உயர்மட்ட பாலமாக விளங்குகிறது. 2016ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இத்திட்டம், முதலில் அதிமுக ஆட்சியில் ரூ.1621 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு, பின்னர் திமுக ஆட்சியில் கூடுதல் தேவைகளுக்காக ரூ.1791 கோடியாக உயர்த்தப்பட்டது. நான்கு வழிப் பாதையுடன், அண்ணாதுரை சிலை, ஹோப் காலேஜ், நவஇந்தியா, விமான நிலையம் ஆகிய இடங்களில் ஏறும்-இறங்கும் தளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இது, கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.

பாலத்தின் சிறப்பம்சமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பு தமிழ்நாட்டில் முதன்முறையாக இங்கு நிறுவப்பட்டுள்ளது. 220 ஆழ்துளைகள் வழியாக மழைநீர் நிலத்திற்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். முன்பு இந்த 10 கி.மீ. தூரத்தை கடக்க 45–50 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், இப்போது வெறும் 10 நிமிடங்களில் கடக்க முடிகிறது. தொழில், கல்வி, மருத்துவம் மற்றும் போக்குவரத்துத் தளங்களால் செழித்த கோயமுத்தூரில், ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்ட இந்த மேம்பாலம், மாநிலத்தின் வளர்ச்சிக்கான புதிய அடையாளமாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Politics

To Top