தினம் ஒரு திருக்குறள்

0
145

“அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு”.

அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறிய அவர் விடுகிற மூச்சுக்காற்று வழியாலோ, இதயத்துடிப்பு வழியாகவோ அல்லது குருதி ஓட்டம் வழியாகவோ மருத்துவர் முடிவு கட்டுவர். ஆனால் அன்பின் வழியாக மட்டுமே ஒருவருக்கு உயிர் உள்ளதா அன்றி இல்லையா என்பது அறியப்படவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். அன்பில்லாதவர் உயிருடன் கூடிய பிணத்தை ஒப்பர். அன்பற்றவர் வாழ்க்கை ஒளிர்வதில்லை; இன்பமாகவும் அமைவதில்லை; அவர் வாழ்வுக்குப் பொருளும் இல்லை. அவர் உளர் எனினும் இல்லாதவரே. எனவே அது நடைப்பிணம். உயிர்த்திருக்கும் எல்லோரும் அன்புடையவராய் இருக்கவேண்டும் என்பது கருத்து.