ரெய்னாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா தோனி..?பெரும் எதிர்பார்ப்பு

0
44

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வரும் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

சி.எஸ்.கே அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா, கடந்த வாரம் தனிப்பட்ட காரணங்களுக்காக துபாயில் இருந்து நாடு திரும்பினார். ஐபிஎல் தொடர் முழுவதும் சுரேஷ் ரெய்னா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடர் ஆரம்பமானது முதல் கடந்த சீசன் வரை சென்னை அணிக்காக மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி பேட்டிங்கில் அசத்தியவர் ரெய்னா. இதனால், ரெய்னா இடத்தில் யார் இறங்குவார்கள் என்ற விவாதம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3-வது இடத்தில் தோனி களமிறங்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ரெய்னா கூறுகையில், “ 3- வது இடமானது பேட்டிங் இன்னிங்சின் அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். அதனால் மூன்றாவது பேட்ஸ்மேனாக தோனி தான் ஆட வேண்டும். மூன்றாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கி சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமும் தோனிக்கு உள்ளது” என்றார்.இதனால் ரெய்னாவின் இந்த விருப்பத்தை தோனி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ள்ளது .