நாடாளுமன்ற தேர்தல் 2019: திருநெல்வேலி மக்களவை தொகுதி பற்றிய அலசல்!!

0
487

மத்தியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டுக்கு அடுத்தகட்ட தேர்தல் இன்னும் சில மாத காலத்தில் துவங்க இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 39 மக்களவை தொகுதிகளும் புதுவையில் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளின் வெற்றி, தோல்வி, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அத்தொகுதிகள் கண்ட வரலாறு காணாத மாற்றங்களை தான் தொகுதி வாரியாக நாம் காண இருக்கிறோம்.

அவற்றில் நாம் இந்த கட்டுரையில் காண இருப்பது திருநெல்வேலி மக்களவை தொகுதி.

தொகுதி பிரிவினை (மறுசீரமைப்பு)

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009க்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விளாத்திகுளம், சிறீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி.

தற்போது திருநெல்வேலி மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் – ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, இராதாபுரம்.

வாக்காளர்களின் எண்ணிக்கை

திருநெல்வேலி மக்களவை தொகுதியில் 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலின்போது முதன்மை தேர்தல் ஆணைய அலுவலரால் வெளியிடப்பட்ட பட்டியலின் படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,84,212. இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,88,124 பேரும் பெண்களின் எண்ணிக்கை 6,96,078 பேரும் அடங்குவர். இந்த ஆண்டு கணக்கெடுப்பில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை முன்பைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு சதவீதம்

1951ஆம் ஆண்டிலிருந்து மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் சராசரியாக 65% வாக்குகள் பதிவாகின்றன. அதிகபட்சமாக 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67.68% வாக்குகள் பதிவாகின. அதற்க்கு அடுத்ததாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெறும் 66.16% வாக்குகள் பதிவாகின. கடந்த முறை 2009ஆம் ஆண்டின் வாக்குப்பதிவைவிட 1.52% வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.

வெற்றி பெறப்போகும் கட்சி (கணிப்பு)

1951ஆம் ஆணிலிருந்து 16 முறை தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில் இதுவரை அதிமுக அதிகபட்சமாக 7 முறையும், காங்கிரசு 5 முறையும் திமுக 2 முறையும் வென்றுள்ளன. மேலும், சுதந்திர கட்சி, சிபிஐ ஆகியவை 1 முறை வென்றுள்ளன.

இத்தொகுதியில் காங்கிரசை விட அதிமுகவின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. அதேபோல் திமுக மற்றும் காங்கிரசு கூட்டணி அமைந்துள்ளதால் தீவிரமாக செயல்பட்டால், பலம் வாய்ந்த அதிமுகவை சமாளிக்க முடியும்.

வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் (முந்தைய தேர்தல் முடிவுகள்)

16 முறை தேர்தலை சந்தித்துள்ள இத்தொகுதியில் கடந்த இரு தேர்தலை பார்க்கையில்,

2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எசு.இராமசுப்பு அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கான தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கிய பிரபாகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.தேவதாசசுந்தரம் விட சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை திருநெல்வேலி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

 • 1951-57 – தாணு பிள்ளை – காங்கிரசு.
 • 1957-62 – தாணு பிள்ளை – காங்கிரசு.
 • 1962-67 – முத்தையா – காங்கிரசு.
 • 1967-71 – சேவியர் – சுதந்திரா கட்சி.
 • 1971-77 – முருகானந்தம் – சிபிஐ.
 • 1977-80 – ஆலடி அருணா – அதிமுக.
 • 1980-84 – சிவப்பிரகாசம் – திமுக.
 • 1984-89 – கடம்பூர் ஜனார்த்தனம் – அதிமுக.
 • 1989-91 – கடம்பூர் ஜனார்த்தனம் – அதிமுக.
 • 1991-96 – கடம்பூர் ஜனார்த்தனம் – அதிமுக.
 • 1996-98 – சிவப்பிரகாசம் – திமுக.
 • 1998-99 – கடம்பூர் ஜனார்த்தனம் – அதிமுக.
 • 1999-04 – பி.எச். பாண்டியன் – அதிமுக.
 • 2004 – தனுஷ்கோடி ஆதித்தன் – காங்கிரசு.
 • 2009 – எசு. இராமசுப்பு – காங்கிரசு
 • 2014 – பிரபாகரன் – அதிமுக