நாடாளுமன்ற தேர்தல் 2019: ஈரோடு மக்களவை தொகுதி பற்றிய அலசல்!!

0
409

மத்தியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய இருக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டுக்கு அடுத்தகட்ட தேர்தல் நாளை மறுநாள் துவங்க இருக்கிறது.தமிழகத்தில் மட்டும் 39 மக்களவை தொகுதிகளும் புதுவையில் ஒரு மக்களவை தொகுதியும் உள்ளன. இவற்றில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளின் வெற்றி, தோல்வி, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அத்தொகுதிகள் கண்ட வரலாறு காணாத மாற்றங்களை தான் தொகுதி வாரியாக நாம் காண இருக்கிறோம்.

அவற்றில் நாம் இந்த கட்டுரையில் காண இருப்பது ஈரோடு மக்களவை தொகுதி.

தொகுதி பிரிவினை (மறுசீரமைப்பு)

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது. அதற்குப் பதில் அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

ஈரோடு தொகுதியில் தற்போதுள்ள சட்டமன்ற தொகுதிகள் –
குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம்.

வாக்காளர்களின் எண்ணிக்கை

ஈரோடு மக்களவை தொகுதியில் 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலின்போது முதன்மை தேர்தல் ஆணைய அலுவலரால் வெளியிடப்பட்ட பட்டியலின் படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,96,414. இதில் ஆண்களின் எண்ணிக்கை 6,44,434 பேரும் பெண்களின் எண்ணிக்கை 6,51,924 பேரும் அடங்குவர். இந்த ஆண்டு கணக்கெடுப்பில் வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 15லிருந்து 20 சதவீதம் வரை முன்பைவிட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவு சதவீதம்

2009 ஆம் ஆண்டிலிருந்து மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் இந்த தொகுதியில் சராசரியாக 76% வாக்குகள் பதிவாகின்றன. அதிகபட்சமாக 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 76.06% வாக்குகள் பதிவாகின. அதற்க்கு அடுத்ததாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெறும் 75.98% வாக்குகள் பதிவாகின. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 2009ஆம் ஆண்டின் வாக்குப்பதிவைவிட சற்று அதிகமாக இருந்தாலும், பெரிதளவில் வித்தியாசம் இல்லை.

இந்தாண்டு கடந்த முறையை விட குறைந்தது 5% அதிகளவு வாக்குகள் பதிவாகுமென தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வெற்றி பெறப்போகும் கட்சி (கணிப்பு)

2009ஆம் ஆண்டிலிருந்து இருமுறை மக்களவை தேர்தலை சந்தித்துள்ள ஈரோடு தொகுதியில் 2009ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணியில் இருந்த மதிமுக கட்சி வென்றது. 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வென்றது.

இம்முறை மதிமுக யாருடன் கூட்டணியில் உள்ளது என்பது இன்னும் தெளிவாகவில்லை. காரணம், மதிமுகவிற்கு இத்தொகுதியில் தனி பலம் உள்ளது. அதே போல சென்ற தேர்தலில் வென்ற அதிமுக கட்சியும் தனது தீவிர செயல்பாட்டை காட்டி வருவதால் களம் காணும் திமுகவிற்கு கடும் போட்டியாக இருக்கும். இத்தொகுதியில் மூன்று கட்சிகளும் சமபலத்துடன் உள்ளது.

வெற்றிக்கான வாக்குகள் வித்தியாசம் (முந்தைய தேர்தல் முடிவுகள்)

2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இந்த தொகுதியில் மட்டும் மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த அ.கணேசமூர்த்தி காங்கிரசின் ஈ.வே.கி.ச.இளங்கோவன 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.

கடந்த 2014ஆம் ஆண்டுக்கான தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கிய எஸ்.செல்வக்குமார் சின்னையன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி விட சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை ஈரோடு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்

தேர்தல்வெற்றி பெற்றவர்கட்சி
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009அ. கணேசமூர்த்திமதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014எஸ். செல்வக்குமார் சின்னையன்அதிமுக

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

வெங்கு ஜி.மணிமாறன் (அதிமுக)

ஏ.கணேசமூர்த்தி (மதிமுக)

கேசி செந்தில் குமார் (அமமுக)

சரவணக்குமார் (மநீம)

சீதாலட்சுமி (நாம் தமிழர்)