வெற்றிமாறன்-சூரி படத்தில் ஏற்பட்ட திடீர் பெரிய மாற்றம்?

0
144

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன். தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே சூரியை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருந்தார் வெற்றிமாறன்.மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார்.

பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும், மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி நாவலை மையமாகக் கொண்டு புதிய கதைக்களத்தை உருவாக்கும் பணியில் படக்குழு ஈடுபட்டதாகவும், இத்திரைப்படத்தை சவுதி, கத்தார் ஆகிய இடங்களில் படமாக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதிலும் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருவதாக ‘தி இந்து’ வலைதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே படப்பிடிப்பு நடத்தும் வகையில் தற்போது புதிய கதைக்களத்தை படக்குழு உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.