பலவீனமான இதயம் கொண்டவர்கள் தவிர்த்தல் நலம்…!சைக்கோ-திரைவிமர்சனம்

0
140

தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதை தான் ‘சைக்கோ’.

கோயம்புத்தூரில் தொடர்ச்சியாகப் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கொலைகாரனை எந்த வழியிலும் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. இதனிடையே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எஃப்.எம்.மில் பணிபுரியும் அதிதி ராவைக் காதலிக்கிறார். அவரிடம் தன் காதலைச் சொல்லப் பலவழிகளில் முயல்கிறார். இறுதியில், நாளை என் எஃப்.எம். நிகழ்ச்சியைக் கேள். அதில் ஒரு க்ளூ சொல்கிறேன். அதைச் சரியாக ஊகித்து வந்துவிட வேண்டும். உனக்காக அங்கு நான் காத்திருப்பேன். அப்படி நீ வந்துவிட்டால் பார்க்கலாம் என்று சொல்கிறார் அதிதி ராவ். உதயநிதியும் சரியாகச் செல்ல, அந்த இடத்தில் அதிதி ராவைக் கடத்துகிறார் சைக்கோ கொலைகாரன்.

சைக்கோ கொலைகாரன் அதிதி ராவைக் கொலை செய்யப் போகும் போது, அவரோ பயப்படாமல் இருக்கிறார். இது கொலைகாரனை ஆத்திரமூட்டுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் என் பிறந்த நாள். அதற்குள் என் கவுதம் என்னைக் காப்பாற்றுவான் என்று சைக்கோவிடம் சவால் விடுகிறார் அதிதி ராவ். இந்தச் சவால் என்னவானது, காவல்துறையினரால் நெருங்கவே முடியாத சைக்கோவை உதயநிதி எப்படி நெருங்கினார், நித்யா மேனன் எப்படி உதவினார், உதயநிதியின் காதலை ஏற்றுக் கொண்டாரா அதிதி ராவ் இப்படியான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது திரைக்கதை.

சைக்கோவாக ராஜ்குமார், ஆக்ரோஷம், கோபம் என கண்ணாலே மிரட்டுகிறார். உதயநிதியின் காதலியாக அதிதி ராவ் , சிங்கம் புலி, போலீஸாக இயக்குநர் ராம், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் தங்கள் பங்கை நிறைவாக செய்துள்ளனர். குறைவான வசனங்கள் , நடிகர்களின் அளவான நடிப்பு என நகரும் படத்தில் பயத்தையும் டென்ஷனையும் தன் பின்னணி இசையால் பார்வையாளர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளார் இளையராஜா .

உன்னை நினைத்து நினைத்து’ பாடலும் அதைக் காட்சிப்படுத்திய விதமும் இதமாக இருக்கிறது. தன் இசையின் மூலமாகவும் பயத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

படத்தில் சில கொலை சம்பங்கள் முகத்தை சுளிக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.பலவீனமான இதயம் கொண்டோர்,குழந்தைகள்,பெண்கள் இந்த படத்தை தவிர்த்தல் நலம்.