‘பட்டாஸ்’-திரை விமர்சனம்: தனுஷின் இரட்டை வேடங்கள் அவரது வழியில்…!

0
136

தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளிவந்திருக்கும் படம் பட்டாஸ். கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இரண்டாவது முறையாக தனுஷை பட்டாஸ் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவைத்துள்ளார்.அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்துக்குப் பின் 13 ஆண்டுகள் கழித்து தனுஷ் – சினேகா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

மகன் தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்தப் படத்தில் தற்காப்பு கலை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

பட்டாஸ் என்கிற சக்தி(மகன் தனுஷ்) நண்பர்களுடன் சேர்ந்து சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு எதிர்வீட்டில் இருக்கும் சாதனா (மெஹ்ரீன்) செய்யும் நக்கல் பிடிக்காமல் அவர் வேலை பார்க்கும் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் பதக்கங்கள், கேடயங்களை திருடுகிறார். இதனால் மெஹ்ரீனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இதையடுத்து மெஹ்ரீன் மீது பாவப்பட்டு குத்துச் சண்டை பயிற்சி மையத்தில் இருக்கும் அவரின் சான்றிதழ்களை திருடச் செல்கிறார் தனுஷ். இதற்கிடையே கொலை வழக்கில் சிறையில் இருந்த கன்னியாகுமரி (சினேகா) வெளியே வந்ததும் நேராக வில்லன் நிலனை (நவீன் சந்திரா) கொலை செய்ய குத்துச் சண்டை பயிற்சி மையத்திற்கு வருகிறார்.

வந்த இடத்தில், தான் இறந்ததாக நினைத்த மகன் சக்தி உயிருடன் இருப்பதை பார்க்கிறார். சக்தி அடிமுறைக் கலையில் வல்லவரான தன் தந்தை திரவியம்பெருமாள்(தனுஷ்) பற்றி தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தந்தையை கொன்றவரை பழிவாங்க கிளம்புகிறார்.

அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அப்பா திரவியம். சினேகா கன்னியாகுமரியாகவே வாழ்ந்துள்ளார். கலக்கப்போவது யாரு சதீஷின் காமெடி நம்மை சிரிக்க வைக்கிறது. அவர் கவுண்ட்டர் கொடுப்பது தான் சிறப்பு.

எதையும் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பட்டாஸாகவும், பாரம்பரியமான திரவியமாகவும் தனுஷ் அனைவரையும் ஈர்க்கிறார்.விவேக் – மெர்வின் கூட்டணியும் பின்னணி இசையும் படத்துக்கு ஆகப்பெரும் பலமாக அமைந்திருந்தது.அடிமுறை என்ற கலையை பற்றி சொன்ன விதமும் அதனை திரைக்கதையில் கையாண்ட விதமும் படத்தை சுவாரஸியப்படுத்தியது. கதை ரொம்ப பழசு. நடப்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இது தான் கதையின் மைனஸ்.தமிழ் கலைகளையும் கலாச்சாரங்களையும் கமர்ஷியல் சினிமாவாக சொன்னவிதத்தில் பாராட்டப்படுகிறது இந்த பட்டாஸ்.