சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘கன்னி மாடம்’ திரைப்படம் – உற்சாக ஊஞ்சலில் இயக்குனர்

0
33

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கன்னிமாடம்’ திரைப்படம் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்தபடம் என்ற விருதைப் பெற்றுள்ளது.

சாதி ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் நடிகர் போஸ் வெங்கட்.

ஸ்ரீராம், காயத்ரி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற்றது தந்தது .

முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்த போஸ் வெங்கட், அடுத்ததாக உறியடி பட இயக்குனர் நடிகர் விஜயகுமாரை நாயகனாக வைத்து இயக்குகிறார். விளையாட்டு மற்றும் தண்ணீர் பிரச்னையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ‘கன்னிமாடம்’ திரைப்படம் டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ‘சிறந்த திரைப்படம் – ரசிகர்கள் தேர்வு’ என்ற விருதைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் மற்றும் நடிகர் போஸ் வெங்கட் கூறியிருப்பதாவது, நடிகராக பல்வேறு படங்களில் நடித்து பாராட்டைப் பெற்றிருந்தாலும் இந்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று தான் இயக்குனராக எனது முதல் முயற்சியான ‘கன்னி மாடம்’ வெளியானது. அன்றைய தினம் பலரும் என்னை தொலைபேசியில் வாழ்த்தியது மட்டுமல்லாது, விமர்சன ரீதியாக பலரும் கொண்டாடினார்கள்.

அந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது மறக்க முடியாதது . எத்தனை படங்கள் இதற்குப் பிறகு இயக்கினாலும், முதல் படத்துக்குக் கிடைத்த பாராட்டு, வரவேற்பு என்பது தனி தான் என்றார் . இன்னும் ‘கன்னி மாடம்’ திரைப்படம் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.ஆம், டொரான்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் “சிறந்த திரைப்படம் – ரசிகர்கள் தேர்வு” என்ற விருதை வென்றிருப்பதைப் பெருமையுடன் உங்களிடையே பகிர்ந்துக் கொள்கிறேன். இப்படியான விருதுகள் கிடைக்கும் போது தான், நம்மை இன்னும் உற்சாகமாக்கி மேலும் ஓட வைக்கும்” என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.