சீனாவிலிருந்து கிளம்பும் மற்றொரு வைரஸ்…அலெர்ட் கொடுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

0
43

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை திணறடித்து வருகிறது. வைரஸ் தொற்று பரவி 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும், இன்னும் பல நாடுகள் வைரசின் பிடியில் இருந்து தப்ப முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளும் இன்னும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்தியாவும் இந்த நிலைக்கு தப்பவில்லை.

கொரோனா தொற்றின் தாக்கமே இன்னும் முடிவு பெறாமல் இருக்கும் நிலையில், இந்தியாவில் சீனாவில் கண்டறியப்பட்ட மற்றுமொரு வைரஸ் பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதாவாது கேட் கியூ வைரஸ் என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளதாக புனேவில் உள்ள ஐசிஎம்ஆரின் வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், ஆய்வு மேற்கொள்ளப்படும் போது யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இல்லை. இந்த வைரஸ் சீனா மற்றும் வியட்நாமில் பெருமளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சூழலில் மூன்று வகையான கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ வாயுப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.