சூர்யாவுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை வேண்டாம்…வலுக்கும் ஆதரவு

0
17

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்தது தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ‘நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை.

ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’என்று குறிப்பிட்டிருந்தார்.நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்தும், தீர்ப்பு குறித்தும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, நீதிபதி சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என சூர்யா கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் கருத்து நீதிமன்ற மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் தவறாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறியிருக்கிறார். எனவே, சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.அதனையடுத்து, பல்வேறு தரப்பினரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ளனர். நீட்தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாக சூர்யாவின் அறிக்கை உள்ளது. சூர்யா உள்நோக்கத்துடன் கருத்து தெரிவித்திருக்கமாட்டார். சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.