ஒரு படத்தை யாருக்கு வேண்டுமானாலும் விற்போம் – பிரபல இயக்குனரின் காரசார பேச்சு

0
30

ஒரு படத்தை யாருக்கு விற்க வேண்டும் என்பது தயாரிப்பாளரின் உரிமை என மூத்த இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாய் பல நல்ல வெற்றி படங்களை கொடுத்தவர் மூத்த இயக்குநர் பாரதிராஜா.இவர் தலைமையிலான தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னையில் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா

உலகின் கொடிய நோய்யான கரோனா வைரஸ் பரவலால் நிறுத்தப்பட்ட படங்களின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கவேண்டும். அதன்பிறகு புதிய படத்தைத் தொடங்குங்கள் என தயாரிப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் .

முன்பு நிறைய விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். அப்போது பிரச்னையில்லாமல் இருந்தது. இப்போது விநியோகஸ்தர்களே இல்லை. நேரடியாகத் திரையரங்குகளுக்குப் படங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. இதில் கிடைக்கும் பலன்களில் பெரும்பாலானவைத் திரையரங்குகளுக்கே செல்கின்றன. இதற்காக அறிக்கை கொடுத்துள்ளோம். பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக இந்த சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் சுதந்திரம் எங்களுக்கும் உண்டு. என் பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன். இன்னாருக்குத்தான் விநியோகம் செய்யவேண்டும் என யாரும் கூற முடியாது. எனெனில் அது என் பொருள். நீங்கள் வாங்கவில்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்பது எங்களுக்குத் நன்றாக தெரியும் என தெரிவித்தார் .

மேலும் பேசிய அவர் திரையரங்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அது அவர்கள் பொருள். எங்கள் படங்களால் தான் திரையரங்கம் புகழ் பெறுகிறது. எங்கள் படத்தைப் பார்க்கத்தான் திரையரங்குக்கு மக்கள் வருகிறார்கள். திரையரங்குகள் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நாங்கள் வெளியே செல்ல மாட்டோம். நடிகர்களுக்குக் கோடிக்கணக்கில் சம்பளம் தருவது தயாரிப்பாளரின் உரிமை. அதை மற்றவர்கள் கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் கரோனா முடிந்த பிறகு சிறிய படங்களை வெளியிடத் திரையரங்குகள் தயாராக உள்ளதா என்று காரசாரமாக கூறியுள்ளார்.