வலுவிழந்த பின்பும் ஒரே இடத்தில் நகராமல் இருக்கும் புரெவி… வெளுத்து கட்டப்போகும் கனமழை..!எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்..?

0
47

வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய புரெவி புயல் சற்றே வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று முதல் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது இன்று மாலை வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நகரக் கூடும். இது மேலும் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியதாக மாறி மெதுவாக நாளை மாலை மேற்கு தென்மேற்காக நகர்ந்து கேரள பகுதியை அடையக் கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழையும், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், வேலூர் ஆகிய உள் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களான செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்.