கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அணியில் இணைவாரா சிஎஸ்கே வீரர் ?

0
22

சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபாய் , அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன . இந்நிலையில் ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போட்டிக்காக துபாய் , அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த இரு வீரர்கள் தவிர மற்ற சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் பயிற்சியைத் தொடங்கினார்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்,குணமடைந்து அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மற்ற சிஎஸ்கே உறுப்பினர்களும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார்கள்.

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு சிஎஸ்கே வீரரான ருதுராஜ் கெயிக்வாட், இன்னும் குணமாகாமல் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் . சமீபத்தில் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையிலும் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கரோனா இல்லை என்று உறுதியான பிறகே அவரால் அணியினருடன் இணைய முடியும்.

சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் ருதுராஜ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கரோனா பாதிப்பால் ருதுராஜால் பயிற்சி பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையிலும் கரோனா பாதிப்பால் கடந்த 14 நாள்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் ஐபிஎல் போட்டி தொடங்கிய முதல் 10 நாள்களுக்கு ருதுராஜால் சிஎஸ்கே அணியில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.