மும்பை அணிக்கு 202 ரன்களை இலக்காக வைத்தது பெங்களூரு அணி…

0
11

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது.

2020 ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பெங்களூரு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் பின்ச் நல்ல தொடக்கம் தந்தனர்.

பின்ச் சரியான டைமிங்கில் விளையாடாவிட்டாலும், அதன்பிறகு ஆட்டத்தை துரிதப்படுத்தினார். படிக்கல் நல்ல ஒத்துழைப்பு தந்தார்.இதன்மூலம், பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பின்ச் 31-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.ஆனால், அரைசதம் அடித்த கையோடு 52 ரன்களுக்கு போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி ரன் குவிக்கத் தடுமாறினார். இதனால், இடையில் 3 ஓவர்களில் 1 பவுண்டரிகூட கிடைக்கவில்லை. இதனால், ரன் ரேட் குறைந்தது. கடைசியில் அவர் ஆட்டமும் இழந்தார். 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார் கோலி.

இதையடுத்து, படிக்கல்லுடன் டி வில்லியர்ஸ் இணைந்தார். டி வில்லியர்ஸ் வந்தவுடன் படிக்கல்லும் அதிரடியாக ஆடினார் . பேட்டின்சன் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்த அவர் அரைசதத்தை நெருங்கினார்.

போலார்ட் ஓவரில் பவுண்டரி அடித்த அவர் அரைசதத்தைக் கடந்தார். இருவரும் அதிரடி காட்ட ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் ரன் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், படிக்கல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார் படிக்கல் .எனினும், டி வில்லியர்ஸ் பினிஷிங் பொறுப்பை ஏற்று தொடர்ந்து, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். 19-வது ஓவரை பூம்ரா வீச அதிலும் அதிரடி காட்டிய டி வில்லியர்ஸ் 1 பவுண்டரியும் 1 சிக்ஸரும் அடித்தார். இதன்மூலம், 23-வது பந்தில் தனது அரைசத்தையும் எட்டினார் டி வில்லியர்ஸ்.

கடைசி ஓவரில் துபே ஸ்டிரைக்கில் இருக்க பேட்டின்சன் ஓவர் வீசினார். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. அடுத்த 2 பந்துகளை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் துபே. அடுத்த 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே கிடைக்க, கடைசி பந்தை மீண்டும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் துபே.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 24 பந்துகளில் 55 ரன்களுடனும், துபே 10 பந்துகளில் 27 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.