தன்னைப் பார்க்க வந்து சாலையில் படுத்து உறங்கிய ரசிகரை நேரில் சந்தித்த நடிகை…!

0
118

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இவரைக் காண பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் மும்பைக்குச் சென்றுள்ளார். பூஜா ஹெக்டேவை சந்திக்க பலவிதமான முயற்சிகளில் பாஸ்கர் ராவ்க்கு தோல்வியே கிடைத்துள்ளது. எப்படியாவது தனக்குப் பிடித்த நடிகையை பார்த்துவிட்டுத் தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய பாஸ்கர் ராவ் தங்குவதற்கு இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து உறங்கியதாக தெரிகிறது.

இதையடுத்து பாஸ்கர் ராவ் குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியான நிலையில் அவரை நேரில் சந்தித்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே. ரசிகரை சந்தித்ததை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே, “நீங்கள் மும்பைக்கு வந்ததற்கும் 5 நாட்கள் காத்திருந்து என்னை சந்தித்தற்கும் நன்றி. உங்களுடைய செயலை நினைத்து நெகிழ்ந்தேன். அதே நேரத்தில் என்னுடைய ரசிகர்கள் இதுபோன்ற செயல்களால் சிரமத்திற்குள்ளாவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

எனது ரசிகர்கள் சாலையில் படுத்து உறங்குவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களது அன்பை உணர்வேன் என்று சத்தியமிட்டுக் கூறுகிறேன். ரசிகர்களே என்னுடைய பலம்” என்று கூறியுள்ளார்.