பிரபல நடிகர் ஐசியுவில் அனுமதி : குடும்பத்தார் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை

0
41

இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அனுபம் ஷ்யாம். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பார். 24 ஆண்டுகளாக அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வரும் அனுபம் ஷ்யாமுக்கு சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மலத் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. டயாலிசிஸ் நடந்து கொண்டிருந்தபோது அனுபமின் நிலைமை மோசமானதால் குர்காவ்னில் இருக்கும் லைஃப்லைன் மருத்துவமனைக்கு அனுபமை மாற்றியுள்ளார்கள்.

TV Actor Anupam Shyam in ICU, seeks financial help from Sonu Sood ...

62 வயதாகும் அனுபம் குறித்து அவரின் சகோதரர் அனுராக் கூறியதாவது,அனுபம் பய்யா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். நிதி பிரச்சனையால் அவரால் நல்ல சிகிச்சை பெற முடியவில்லை. அனுபமின் நிலைமை குறித்து அவரின் நண்பர்களிடம் தெரிவித்துள்ளேன். மேலும் பீயிங் ஹ்யூமன் இணையதளம் மூலம் சல்மான் கானிடம் உதவி கேட்டுள்ளேன். பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் எனக்கு போன் செய்து உதவி செய்வதாக கூறினார் என்றார்.

சத்யா படத்தில் அனுபம் மனோஜ் பாஜ்பாயுடன் நடித்துள்ளார். அனுபம் ஷ்யாம் ஷாருக்கானின் தில் சே, ஆமீர் கானின் லகான், ஸ்லம்டாக் மில்லியனர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மன் கீ ஆவாஸ் பிரதிக்யா தொலைக்காட்சி தொடரில் தாகூர் சஜ்ஜன் சிங்காக நடித்து பிரபலமானார்.

கடந்த மாதம் நிறைவடைந்த கிருஷ்ணா சலி லண்டன் தொடர் தான் அனுபம் நடிப்பில் கடைசியாக வெளியான தொடர் ஆகும். கொரோனா வைரஸ் பிரச்சனையால் சின்னத்திரை மற்றும் பெரிய திரையை சேர்ந்த பலர் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

இந்நிலையில் தான் அனுபம் ஷ்யாமின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.